திருநள்ளாறு

saran
0

தலத்தின் பெயர்: திருநள்ளாறு – நவகிரகத் தலம் (Thirunallar)
சுவாமியின் திருநாமம்: ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரர், சுக்ரன், (Tharbaranyaswarar, Saneeswarar)
தல விருட்சம்: தர்ப்பை
தீர்த்தம்: நளதீர்த்தம், பிரம்மதீர்த்தம், வாணி தீர்த்தம். இது தவிர அன்னதீர்த்தம், கங்கா தீர்த்தம் (நள தீர்த்தக்கரையிலுள்ள நளவிநாயகர் கோயிலில் உள்ள கிணறு), அஷ்டதிக்பாலகர் தீர்த்தங்கள் எனப்படும் எட்டு தீர்த்தங்கள்.

அமைவிடம்: திருநள்ளாறு, காரைக்கால்.

செல்லும் வழி: காரைக்காலில் இருந்து 5 கி.மீ. தூரத்தில் இத்தலம் அமைந்துள்ளது.

தரிசன நேரம்: காலை 6.00 முதல் பகல் 12.30 வரை, மாலை 4.00 முதல் இரவு 8.30 வரை.

தல வரலாறு:
நிடதநாட்டு மன்னன் நளன் சேதி நாட்டு இளவரசி தமயந்தியை திருமணம் செய்தான். இப்பெண்ணை தேவர்கள் மணக்க விரும்பினர். ஆனால், நளனை அவள் திருமணம் செய்ததால் பொறாமை கொண்டு, சனீஸ்வரனை நாடினர். சனீஸ்வரன் நளனின் தூய்மையான மனநிலையை அவர்களுக்கு உணர்த்த, அவனை ஏழரை ஆண்டுகள் பிடித்து துன்பப்படுத்தினார். மனைவி, மக்களையும், உடுத்தும் துணியைக் கூட இழந்து அவஸ்தைப்பட்ட மன்னன் நளன் எதற்கும் கலங்கவில்லை.

ஒரு கட்டத்தில் திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரரை நளன் வணங்கினான். அப்போது சனி அவனை விட்டு நீங்கியது. அவனது வேண்டுகோளின் படி இதே தலத்தில் கிழக்கு நோக்கி அமர்ந்து ஈஸ்வர பட்டத்துடன் "சனீஸ்வரன் என்ற பெயர் தாங்கி அருள்பாலித்தார். கிழக்கு நோக்கிய சனீஸ்வரன் என்பதாலும், சிவனருள் பெற்றவர் என்பதாலும், இவரை வழிபட்டு, சனியினால் ஏற்படும் தொல்லைகள் நீங்கப் பெறலாம். நளசரிதம் படித்தவர்களும் சனித்தொல்லை நீங்கப் பெற்று, வாழ்வில் தன்னம்பிக்கை பெறுவர்.

ஒதுங்கிய நந்தி:
இத்தலத்தில் நந்தியும், பலிபீடமும் சுவாமிக்கு எதிரே இல்லாமல் சற்று ஒதுங்கியிருப்பதைக் காணலாம். இடையன் ஒருவன் அரசன் ஆணைப்படி கோயிலுக்குப் பால் அளந்து கொடுத்துவந்தான். கணக்கன் அப்பாலைத் தன்வீட்டுக்கு அனுப்பிப் பொய்க்கணக்கு எழுதி, இடையனையும் அச்சுறுத்தி வந்தான். செய்தியறிந்த மன்னன் கோபம் கொண்டான். அப்போது இறைவன், இடையனைக் காக்கவும், கணக்கனைத் தண்டிக்கவும் எண்ணி தம் சூலத்தை ஏவினார். அந்த சூலத்திற்கு வழிவிடவே இக்கோயிலில் பலிபீடம் சற்று விலகியுள்ளது. சூலம் கணக்கன் தலையைக் கொய்தது. இடையனுக்கு இறைவன் காட்சி தந்து அருள்புரிந்தார்.

சனீஸ்வரனை வணங்கும் முறை:
காலை 5 மணிக்கு நள தீர்த்தத்தில் நீராடி, கரையிலுள்ள நளவிநாயகர் மற்றும் பைரவரை வணங்க வேண்டும். கோயிலுக்குள் உள்ள கிணறான கங்காதீர்த்தத்தை தரிசித்து, கோபுர வாசலுக்கு வந்து ராஜகோபுர தரிசனம் முடித்து, உள்ளே நுழையும் போது முதல் படிக்கட்டை வணங்கி முதல் பிரகாரத்திற்கு செல்ல வேண்டும். இந்த சுவரில் வரையப்பட்டுள்ள நள சரிதத்தை பக்திப்பூர்வமாக பார்த்த பிறகு, காளத்திநாதரை வணங்க வேண்டும். பின்னர் சுவாமி சன்னதிக்குள் சென்று மூலவர் தர்ப்பாரண்யேஸ்வரரை வணங்கி, தியாகவிடங்கர் சன்னதிக்கு செல்ல வேண்டும். இங்குள்ள மரகதலிங்கத்தை வணங்கிய பிறகு, அர்த்தநாரீஸ்வரர், துர்க்கை, சண்டிகேஸ்வரரை வணங்கிய பின் வெளிப்பிரகாரம் செல்ல வேண்டும். அங்குள்ள தெய்வங்களை தரிசித்து கட்டைக் கோபுர வாசல் சென்று அம்பிகை பிராணேஸ்வரியை வழிபட வேண்டும். பிறகு தான் சனீஸ்வரர் சன்னதிக்கு செல்ல வேண்டும். சிலர் முதலிலேயே சனீஸ்வரனை தரிசிக்க சென்று விடுகின்றனர். இது சரியான வழிபாட்டு முறையல்ல. இங்குள்ள இறைவனை பார்த்த பிறகு சனீஸ்வரனைக் கண்டால் தான் சனிதோஷ விமோசனம் கிடைக்கும்.

கருத்துரையிடுக

0கருத்துகள்
கருத்துரையிடுக (0)