தலத்தின் பெயர்: நாகநாதன் கோவில் – நவகிரகத் தலம் (Naganathan Kovil)
சுவாமியின் திருநாமம்: ஸ்ரீ நாகநாதசுவாமி, கேது, (Naganatha swamy, Kethu)
தல விருட்சம்: மூங்கில்
தீர்த்தம்: நாகதீர்த்தம்
அமைவிடம்: நாகநாதன் கோவில், கீழப்பெரும்பள்ளம், வாணகிரி.
செல்லும் வழி: மயிலாடுதுறை மற்றும் சீர்காழியில் இருந்து 22 கி.மீ. தூரத்தில் இக்கோயில் உள்ளது. பஸ் வசதி அதிகமில்லை. மயிலாடுதுறையில் இருந்து கார் மற்றும் ஆட்டோவில் சென்று வரலாம்.
தரிசன நேரம்: காலை 7.00 முதல் பகல் 12.30 வரை, மாலை 4.00 முதல் இரவு 8.30 வரை.
தல வரலாறு:
தேவர்களும், அசுரர்களும் அமுதம் பெற பாற்கடலை கடைந்தபோது வாசுகி என்ற நாகத்தை கயிறாக பயன்படுத்தினர். தொடர்ந்து பாற்கடலை கடைந்ததால் வாசுகி பலவீனமடைந்தது. ஒருகட்டத்தில் களைப்பால் விஷத்தை உமிழ்ந்தது. பயந்து போன தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர். அவர் விஷத்தை விழுங்கி, தேவர்களை காப்பாற்றினார். தனது விஷத்தை, சிவன் விழுங்க வேண்டிய நிலை ஏற்பட்டதற்காக வாசுகி வருந்தியது. சிவஅபச்சாரம் செய்ததற்கு பிராயச்சித்தமாக மூங்கில் காட்டில் தவமிருந்தது.
வாசுகிக்கு காட்சி தந்த சிவன், பாவ விமோசனம் கொடுத்ததோடு, அதன் தியாக உணர்வை பாராட்டினார். அப்போது வாசுகி, தனக்கு அருள் செய்த கோலத்தில், தனக்கு காட்சி கொடுத்த இடத்தில் எழுந்தருள வேண்டும் என்று வேண்டியது. அதன் வேண்டுதலை ஏற்ற சிவன், நாகத்தின் பெயரைத் தாங்கி, "நாகநாதர்' என்ற பெயருடன் இத்தலத்தில் அமர்ந்தார்.