கணபதி அக்ரஹாரம் (Ganapathy Agraharam)
சுவாமியின் திருநாமம்: மஹா கணபதி
அமைவிடம்: கணபதி அக்ரஹாரம், தஞ்சாவூர், தமிழ்நாடு. (Thanjavur)
செல்லும் வழி:
தஞ்சையில் இருந்து 20 கி.மீ தொலைவில் உள்ளது. தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயங்குகின்றன. கண்டியூர், திருவையாறு, திருப்பழனம், திங்களூர் தலங்களை அடுத்து இந்த ஊர் அமைந்திருக்கிறது. கும்பகோணம், திருவையாறு பேருந்துகள் கணபதி அக்ரஹாரம் வழியாகத் தான் இயங்குகின்றன.
தரிசன நேரம்:
காலை 6.00 முதல் பகல் 12.00 வரை, மாலை 4.00 முதல் இரவு 8.00 வரை.
தல வரலாறு:
இந்த கணபதி அகத்திய முனிவர் பிரதிஷ்டை செய்து வழிபட்டது. மேலும் ஒரு காலத்தில் இந்த ஊர் பெரும் பஞ்சத்தில் வாடியது. ஊர் மக்கள் கவுதம முனிவரை வேண்ட புதையுண்டு கிடந்த கணபதியை மீண்டும் பிரதிஷ்டை செய்து பஞ்சம் நீக்க கவுதம முனிவரால் பூசிக்கப்பட்டு பஞ்சம் தீர்ந்து வளம் பெற்றது.
இந்த ஆலயத்தின் நுழைவாயிலில் அகத்தியர், கௌதமர் ஆகியோர் விநாயகப் பெருமானை பூஜை செய்வது போன்ற சிற்பத்தைக் காணலாம். மகா கணபதிக்கு கோடி அர்ச்சனை செய்யும் வழக்கம் முதன் முதலில் இந்தத் தலத்தில்தான் ஆரம்பிக்கப்பட்டதாக சொல்கிறார்கள். இவ்வாலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழா 15 நாட்களுக்கு நடக்கும் பிரம்மோற்ஸவமாகக் கொண்டாடப்படுகிறது.
இவ்வூரில் வினோதமான ஒரு வழக்கம் உள்ளது. விநாயகர் சதுர்த்தியன்று களிமண்ணில் பிள்ளையார் செய்து வீட்டில் வைத்து பூஜிப்பது கிடையாது. தங்கள் வீட்டில் செய்த கொழுக்கட்டை போன்ற நிவேதனப் பொருள்களை எடுத்துக் கொண்டு அனைவருமே ஸ்ரீமஹாகணபதி ஆலயத்திற்கு வருகின்றனர். இங்குதான் பூஜை, நிவேதனம் எல்லாம். கிராமத்தில் பல குடும்பங்களுக்கு குல தெய்வமாகவும் விளங்குகிறார் இந்த மஹா கணபதி.
விநாயக சதுர்த்தி விழா, கொடியேற்றத்துடன் பத்து நாள் திருவிழாவாக நிகழ்கின்றது. நாளும் காலை மாலை வேளைகளில் திருவீதி உலா சிறப்புடன் நிகழ ஒன்பதாம் நாள் தேரோட்டம். விநாயக சதுர்த்தி அன்று பதினெட்டு காலம் பூஜிக்கப்பட்ட புனித கலச நீரால் மஹாஅபிஷேகம் நிகழ்வுறும். அதன்பின் மக்களுக்கு மகத்தான அன்னதானம். மறுநாள் மாலையில் கண்ணாடிப் பல்லக்கில் வீதி உலா. ஊஞ்சல் சேவை மற்றும் மஞ்சள் நீராட்டு என மங்கலகரமாக திருவிழா இனிதே நிறைவுற ஸ்ரீவிநாயகப்பெருமான் ஆஸ்தான பிரவேசம் கொள்வார்.