தலத்தின் பெயர்: திருவெண்காடு – நவகிரகத் தலம் (Thiruvenkaadu)
சுவாமியின் திருநாமம்: ஸ்ரீ சுவேதாரண்யேஸ்வரர், புதன், (Sri Suvetharanyesvarar, Buthan)
தல விருட்சம்: வடவால், கொன்றை, வில்வம்
தீர்த்தம்: முக்குளம் (சூரிய, சந்திர, அக்கினிதீர்த்தங்கள்)
அமைவிடம்: திருவெண்காடு, நாகை.
செல்லும் வழி: நாகைமாவட்டம் சீர்காழியில் இருந்து பூம்புகார் செல்லும் வழியில் 15 கி.மீ. தூரத்தில் திருவெண்காடு கோயில் உள்ளது.
தரிசன நேரம்: காலை 6.00 முதல் பகல் 12.00 வரை, மாலை 4.00 முதல் இரவு 9.00 வரை.
தல வரலாறு:
புதன் கிரக தோஷப் பரிகாரத் தலமான திருவெண்காடு தலத்திற்கென தனிச் சிறப்புகள் பல உள்ளன. வால்மீகி இராமயணத்தில் இத்தலம் குறிப்பிடப்பட்டுள்ளது. காசிக்கு சமமானதாகத் திகழும் ஆறு தலங்களுள் திருவெண்காடும் ஒன்று. சமயக்குரவர்கல் நால்வராலும் பாடப்பெற்ற தலம். பிரம்ம சமாதி அமைந்துள்ள தலம்.
ஒருமுறை திருஞானசம்பந்தர் திருவெண்காட்டுக்கு வருகை புரிந்த போது அவருக்கு ஊரெல்லாம் சிவலோகமாகவும், மண்ணெல்லாம் சிவலிங்கமாகவும் தோன்றின. ஆதலால் இத்தலத்தை மிதிப்பதற்கு அஞ்சி “அம்மா” என்று அழைத்தாராம். அதை கேட்ட பெரியநாயகி அம்மை அங்கு தோன்றி திருஞானசம்பந்தரை தம் இடுப்பில் எடுத்து வைத்துக் கொண்டாரம்.
பிரம்மனிடம் பெற்ற வரத்தால் மருத்துவன் என்னும் அசுரன் தேவர்களுக்கு துன்பத்தை விளைவித்தான். சிவபெருமான் அருளியபடி தேவர்கள் வேற்றுருவில் திருவெண்காட்டில் வாழ்ந்து வந்தனர். அசுரன் திருவெண்காட்டிற்கு வந்தும் போர் செய்தான். அசுரன் சிவனை நோக்கி தவம் இருந்து சூலாயுதம் பெற்று ரிடபதேவரை சூலத்தால் தாக்கி காயப்படுத்தினான். ரிடபதேவர் சிவனிடம் முறையிட சிவன்கோபம் கொண்டார். அப்பொழுது அவருடைய ஐந்து முகங்களில் ஒன்றான ஈசான்ய முகத்தினின்று அகோரமூர்த்தி தோன்றினார். இந்த அகோர உருவை கண்ட மாத்திரத்திலேயே அசுரன் சிவனிடம் சரணாகதி அடைந்து வணங்கினான்.