பிரதோஷ விரதம்

saran
0
Pradosam valipadu

சிவபெருமானை வழிபட ஏற்ற காலம் சாயரட்சை, அதிலும் சிறந்தது சோமவாரம், அதனினும் சிறந்தது மாத சிவாரத்திரி, அதனினும் சிறந்தது பிரதோஷம், பிரதோஷ தரிசனம் செய்பவர்கள் எல்லா தேவர்களையும் தரிசித்த புண்ணியத்தை பெறுகிறார்கள். நோய் தீரவும், ஏழ்மை ஒழியவும், துயரங்கள் விலகவும் பிரதோஷ வழிபாடு சிறந்ததாகும்.
இவ்விரதத்தை கடைபிடிக்க விரும்புபவர்கள் சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய மாதங்களில் வரும் சனிப் பிரதோச நாளில் விரத தொடங்குதல் சிறப்பு பிரதோச விரதம் கடைபிடிப்போர் பகல் முழுவதும் உபவாசமிருந்து பிரதோச வேளையாகிய சூரிய அஸ்தமனத்தின் போது சிவாலயங்களில் சிவதரிசனம் செய்த பின் உணவருந்த வேண்டும்.

ஆலகால விஷத்தால் மூவுலகிற்கும் ஏற்படவிருந்த பேரழிவை சிவபெருமான் காத்த வேளையே பிரதோஷ காலம். வளர்பிறை பிரதோஷம், தேய்பிறை பிரதோஷமென மாதம் இருமுறை பிரதோஷம் வரும். திரியோதசி திதியில் சூரியமறைவிற்கு முன்னே மூன்றே முக்கால் நாழிகையும், மறைந்ததற்கப்பால் மூன்றே முக்கால் நாழிகையும், ஆக ஏழரை நாழிகைக் காலந்தான் பிரதோஷ காலம் எனப்படும். குறிப்பாக 4:30 மணி முதல் 7:00 மணி வரை உள்ள காலமே பிரதோஷ காலம்.

பிரதோஷ வழிபாடு முறை: முதலில் சிவலிங்கத்தையும் தேவரையும் வணங்கிகொண்டு, அப்பிரதட்சணமாகச் சண்டேசுவரர் சந்நிதி வரை சென்று அவரை வணங்கி கொண்டு, அப்படியே திரும்பி வந்து முன்போல சிவலிங்கத்தையும் ரிஷப தேவரையும் வணங்கிக் கொண்டு வழக்கம்போல் பிரதட்சணமாக ஆலயத்தை வலம் வரும்போது சுவாமி அபிஷேகத் தீர்த்தம் விழும் நிர்மால்யத் தொட்டியைக் கடக்காமல் அப்படியே வந்த வழியே திரும்பி அப்பிரதட்சணமாக சந்நிதிக்கு வந்து சிவலிங்கத்தையும் ரிஷபதேவரையும் வணங்க வேண்டும். இfவ்வாறு மூன்று முறை செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் அனேக அசுவமேத யாகம் செய்த பலன் கிடைக்கும் என நூல்கள் கூறுகின்றன.

பிரதோஷ வகைகள்: நித்திய பிரதோஷம் - அனுதினமும் சூரியமறைவிற்கு மூன்று நாழிகைகள் முன்னர் நட்சத்திரங்கள் தோன்றும் வரை, பக்ஷப் பிரதோஷம் - சுக்லபக்ஷ சதுர்த்தி மாலை, மாதப் பிரதோஷம் - கிருஷ்ண பக்ஷ திரயோதசி, மகாப் பிரதோஷம் - சனிக்கிழமை தினம் கிருஷ்ண பக்ஷ திரயோதசி, பிரளயப் பிரதோஷம் - ஈசனிடம் ஒடுங்கும் பிரளயக் காலம்

திருமுழுக்குப் பலன்களும்:

மலர்கள் - தெய்வ தரிசனம் கிட்டும்
பழங்கள் - விளைச்சல் பெருகும்
சந்தனம் - சிறப்பான சக்திகள் பெறலாம்
சர்க்கரை - எதிர்ப்புகள் மறையும்
தேன் - இனிய சாரீரம் கிட்டும்
பஞ்சாமிர்தம் - செல்வம் பெருகும்
எண்ணெய் - சுகவாழ்வு
இளநீர் - நல்ல மக்கட் பேறு கிட்டும்
பால் - நோய் தீரும் நீண்ட ஆயுள் கிடைக்கும்
தயிர் - பல வளமும் உண்டாகும்
நெய் - முக்தி பேறு கிட்டும்

பிரதோஷ வழிபாடு பலன்:

ஞாயிறு - சுப மங்களத்தை தரும்
திங்கள் - நல் எண்ணம், நல் அருள் தரும்
செவ்வாய் - பஞ்சம், வறுமை, பட்டினி அகலும்
புதன் - நல்ல புத்திரபாக்யம் தரும்
வியாழன் - திருமணத்தடை விலகி மாங்கல்ய பலன் கிட்டும்
வெள்ளி - எதிரிகள், எதிர்ப்பு விலகும்
சனி - அனைத்து துன்பமும் விலகும்

தினசரி  சிவன் கோவிலுக்கு சென்று வழிபட்டால் பஞ்சமா பாவங்கள் விலகும். ஒரு சனிப்பிரதோஷ வழிபாடு 108 சிவ பூஜை செய்த பலன் உண்டாகும்.

கருத்துரையிடுக

0கருத்துகள்
கருத்துரையிடுக (0)