தலத்தின் பெயர்: சூரியனார் கோவில் – நவகிரகத் தலம் (Soorianar temple)
சுவாமியின் திருநாமம்: சூரிய பகவான் (Sooriya Bagavan)
தல விருட்சம்: வெள்ளெருக்கு
வச்திரம்: சிவப்புத் துணி
மலர்: தாமரை மற்றும் எருக்கு
இரத்தினம்: ரூபி
தான்யம்: கோதுமை
வாகனம்: ஏழு குதிரைகள் பூட்டிய தேர்
உணவு: சர்க்கரைப் பொங்கல், ரவை மற்றும் கோதுமை
அமைவிடம்: திருமங்கலக்குடி, திருவிடைமருதூர், தஞ்சாவூர்.
செல்லும் வழி: திருமங்கலக்குடிக்கு வடகிழக்கே அரை கி.மீ. தொலைவில் இவ்வாலயம் உள்ளது.
தரிசன நேரம்: காலை 6.00 முதல் பகல் 12.00 வரை, மாலை 4.00 முதல் இரவு 8.00 வரை.
தல வரலாறு:
இமயமலையின் வடக்குப் பகுதியில் வாழ்ந்த முனிவர்களுள் ஒருவர் காலவ முனிவர். அவருடைய எதிர்காலத்தைப் பற்றி சிந்தித்தபோது பின்னாளில் அவருக்கு தொழுநோய் பீடிக்கும் என்பதை உணர்ந்து மிகவும் வருந்தினார். இமயமலைச் சாரலில் ஐம்புலன்களை அடக்கி, நவக்கிரகங்களை நோக்கிக் கடுந்தவம் புரிந்தார். அவருடைய தவத்தினால் ஈர்க்கப்பட்டு ஒன்பது தேவர்களும் காட்சியளித்தனர். காலவ முனிவர் தம்மை தொழுநோய் பற்ற இருப்பதாகத் தெரிவித்து, அந்நோய் பற்றாமலிருக்க வரம் கேட்டார். ஒன்பது தேவர்களும் வரமளித்து மறைந்தனர்.
படைப்புக் கடவுளான நான்முகன் ஒன்பது தேவர்களையும் அழைத்து "உயிர்களாய்ப் பிறந்த அனைவரும் இன்ப துன்பங்களை அனுபவித்தே ஆக வேண்டும். அந்த முனிவருக்கு வர இருந்த நோய் உங்களுக்கு வரும்" என்று சாபம் கொடுத்தார். அவர்கள் சாபம் நீங்குவதற்காக நான்முகன் வாக்கின்படி வெள்ளெருக்கங்காட்டில் கடுந்தவம் இருந்தனர். பன்னிரு வாரங்களுக்குப் பின்னர் முப்பெருங்கடவுளரும் காட்சி தந்தனர். "உங்களைப் பிடித்திருந்த தொழுநோய் தொலைந்துவிட்டது. இன்று முதல் இந்த இடம் உங்களுடையதே. துன்பம் தொலைய உங்களிடம் வருவோர்க்கு நீங்களே அருள் புரிய வரம் தருகிறோம்" என்று வரம் தந்தனர்.
சிவன் தனது கையிலிருந்த திரிசூலத்தைக் கொண்டு ஒன்பது புனித நீர் நிலைகளை உருவாக்கினார். அந்நீர் நிலைகளில் புனித நீராடி அன்போடு வழிபடுபவர்களுக்கு நவக்கிரகங்களின் அருள் கிடைக்கும். சூரியன் தலைமையில் அனைவரும் மேற்கொண்ட தவத்தால் அங்கே அனைவருக்கும் கோவில் உண்டாகும். மேலும், சூரியனார் கோயில் என்ற பெயரையே இந்த ஊரும் வழங்கி வருமாறு அருள் புரிந்தார்.
தோஷங்கள் நீங்க:
புத்திர தோஷம், விவாகப் பிரதிபந்த தோஷம், உத்தியோகப் பிரதிபந்த தோஷம், சூரிய புத்தி, சூரிய திசை உள்ளவர்கள் இத் தலத்துக்கு வந்து வழிபட்டால் தோஷம் நீங்கும்.